Friday 5 January 2018

ஙப்போல் வளை


                                     

ஙப்போல் வளை




                                     



      பள்ளிக்காலங்களில் ஔவையின் ஆத்திச்சூடி ஙப்போல் வளை என்பது பொருளே தெரியாமல் ஏதோ ஆசிரியர் கற்றுக்கொடுத்தார். அந்த வகையில் மனனம் செய்தோம் என்ற நிலைப்பாடே நீண்டது. அதற்குப்பிறகான காலக்கட்டங்களில் ’ங’வைப்போல் சமுதாயத்தில் வளைந்து கொடுத்துப் போகவேண்டும் எனும் புரிதல் வந்தது. ஙவின் பயன்பாட்டைப் பார்க்கும்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் சொல் பயன்பாடு இருக்கிறது. ஆத்திச்சூடிக்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும் பாவேந்தர் பாரதிதாசனின் மானுடம் போற்றுதும் எனும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது பாவேந்தர் ஙகரப் பயன்பாட்டைப் பயன்படுத்தி 12 உயிர்மெய்யெழுத்துக்களையும்  உள்ளடக்கி ஒரு புதுவிதமானப் பாடலைப் பதிவுசெய்துள்ளார். அவரின் நோக்கம் அனைவரையும் சுயமரியாதை இயக்கத்தில் இணையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது. இருப்பினும் இப்படியெல்லாம் ’ங’ கரத்தைப் பாடலில் புகுத்தமுடியும் என்பது ஒரு புதுவிதமானப் போக்கைச்  சுட்டிக்காட்டுகிறது.  
    ஆத்தி சூடி ‘ஙப்போல் வளை’ என்கிறது. பலரும் ‘ங’ என்ற எழுத்து எப்படி வளைந்திருக்கிறதோ அப்படி உடம்பை வளைக்க வேண்டும் என்பதாகப் பொருள் சொல்வார்கள். உண்மையான பொருள் அதுவல்ல.
   ‘ங்’ என்ற எழுத்தும் ‘ங’ என்ற எழுத்தும் மட்டுமே சொற்களில் பயின்று வரும். பிற எழுத்துக்கள் வராது. ஆக, ஒரு தனி எழுத்து, தன் இனக்குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதுபோன்று ஒவ்வொருவரும் நொடித்திப்போகாது தன் இனத்தைக் காப்பாற்றவேண்டும்.என்பது பொருள். ‘வளை’ என்றால் சூழ்ந்துகொள், காப்பற்று என்று பொருள். ஸ்ரீ ரெங்கத்தில் அடைய வளஞ்சான் தெரு என்று ஓன்றுண்டாம். எல்லோரையும் சேர்த்துக் காப்ப்பாற்றிய தெரு என்பது அதன் பொருளாம். அப்பர் பெருமான் ‘ஙகர வெல் கொடியான்’ (‘ங’வைப் போன்றிருக்கும் எருதை கொடியாகக் கொண்டவன்)  என்று சிவபெருமானைப் புகழ்வதின் வழி இந்த ஆத்திச்சுடிப் பெருமைக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்று சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன், தென்றல் இதழில் குறிப்பிட்டுள்ளார்.  
         ஙங்ஙஃ
         ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
         ஙங்கலந்தன ஙாஙிஙாவரம்
         ஙுங்கலந்தன ஙூஙௌஙோரிது
         ஙெங்கலந்தன ஙேரிஙீத்தலே
                     (பாவேந்தர் பாரதிதாசன், மானுடம் போற்று,  பக்.169-170)
‘ஙங்ஙஃ’ என்றால் பாடல் என்பது பாரதிதாசன் கண்டுபிடித்த பொருளாகும்.
   ஙங்கலந்தன- கடவுளைப்பற்றி, ஙேதி – கவலைப்படுகிறவர்கள், ஙேவலல் – கடந்தெடுத்த, ஙங்கலந்தன – முட்டாள்களேயாவர், ஙாஙி – நீ, ஙாவரம் – முன்னேற, ஙுங்கலந்தன – விரும்பினால், ஙூஙௌ – சுயமரியாதை, ஙோரிது – இயக்கத்தில், ஙெங்கலந்தன – சேர்ந்து, ஙேரி – அதை (முன்னேற்றத்தை), ஙீத்தலே – அடைவாயாக என்று ஒவ்வொன்றிற்கும் பொருள் குறிப்பிட்டு ஙகரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
     கடவுளைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவர். நீ முன்னேற்றமடைய  விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக என்று பாவேந்தர் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தால் முன்னேற்றம் கிட்டும் என்பதை  இப்பாடலின் வழி வலியுறுத்தியுள்ளார்.
      தமிழ் எழுத்தான ‘ங’ என்னும் எழுத்தைப்போல் மற்றவரையும் இணைத்துக் கொண்டு வாழவேண்டும் என்னும் கருத்தும் நிலவுகிறது. (ஙப்போல் – ஙகரம் போல், வளை- உன் இனத்தைத் தழுவு.)
     ‘ங’ என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து, பயனில்லாத ஙா’ முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல், நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள் என மானுட சமுதாயத்திற்கு விழுமியமாக ஙகரம் விளங்குகிறது.
     ‘ஙா’ முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர ஒற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவதுபோல் நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. இது பெண்ணை மையப்படுத்திக் குறிப்பிட்டிருந்தாலும் ’ங’ மெல்லினமாதலால் (மெல்லின எழுத்துள் வருவதால்) இப்படியும் கருதமுடிகிறது.  .
    Be as the letter ’ங’ supporting all your kin. ஆத்திச்சூடியின் காலம் 12 ஆம் நூற்றாண்டு. ங இந்த எழுத்து பல கோணங்களைக் கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றிற்கும் நிமிர்ந்திரு, எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு என்றும் பொருள் கொள்வதுண்டு..  ‘ஙே’ என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் இருக்கிறது. தவறு செய்யும்போது தலையில் ’னங்’ எனக் கொட்டுவதும் உண்டு. தொப்புள் கொடியிலிருந்து விடுபட்ட குழந்தை இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலித் தொடர்பு ‘ங்கா’…. என்பதாகும்.தமிழின் சிறப்பு எழுத்து ‘ழ’ வைப்போல் இன்னொரு எழுத்து ‘ங’ இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால் ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் இருப்பதாகவும் கொள்ளமுடிகிறது..


      மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வராது. அதன் சொந்த மெய்யான ’ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மெய்யெனா ’ங்’ உயிரெழுத்தையும் உயிர்மெய் எழுத்தையும் தொடர்ந்து தான் வரும். அங்கு, இங்கு, எங்கு, தங்கு, பங்கு, வாங்கு, தங்கம், சங்கம், பங்கம், கலிங்கம், பாங்கு, தாங்கு, ஏங்கு, மூங்கில், தூங்கு, நுங்கு, சுங்கம், குரங்கு, இறங்கு, போன்றவற்றைச்  சான்றாகக் குறிப்பிடலாம். அங்ஙனம், எங்ஙனம், இங்ஙனம் எனும் வழக்கும் அரிதாகிவிட்டது. மேலை நாடுகளின் இடப் பெயர்களான ஹாங்காங், பாங்காங், சீனப்பயணியின் பெயரான யுவான்சுவாங் போன்றவற்றிலும் குடும்பப் பெயர்களாக யுவராஜ் சிங், மன்மோகன்சிங், என இறுதியில் ‘ங்’ எனும் மெய்யெழுத்து வருவதைப் பார்க்கமுடிகிறது.

முனைவர் நா.சுலோசனா,
                                                                         உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

                                      தரமணி, சென்னை-113.

2 comments:

  1. விளக்கம் தவறு. பல்கோண பார்வை முக்கியம்.

    ReplyDelete
  2. ஙப்போல் வளை நல்ல அருமையான ஔவையின் சிறந்த ஒரு வரிக்கவிதை.
    விசாலப் பார்வை பாருங்கள் புரியும். இல்லையெனில் என் கடடுரைக்குக் காத்திருங்கள்.

    ReplyDelete